“இஸ்லாமிய வெறுப்பு காட்சி - விஜய் திருந்தல!” ஜனநாயகனால் அதிரையில் சரிந்த TVK ஆதரவு

Editorial
0




நடிகர் விஜய்யின் (கடைசி) திரைப்படமான 'ஜனநாயகன்' இணையத்தில் கசிவிடப்பட்ட நிலையில் அதில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் விவகாரம், 2026 சட்டமன்றத் தேர்தலில் அவரது அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிராம்பட்டினம் பகுதியில் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். 

படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைத்துத் தவறான பிம்பத்தை உருவாக்குவதாகவும், இது சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மீதும் அதிருப்தியில் இருந்தவர்கள் தவெகவிற்கு ஆதரவளிக்கும் மனநிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், “இந்த சர்ச்சையின் காரணமாக, விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். குறிப்பாக, பல ஆண்டுகளாக அவருக்கு ஆதரவளித்து வந்த தீவிர சினிமா ரசிகர்களும் இக்காட்சிகளால் ஏமாற்றமடைந்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.” என்று ஆதங்கப்பட்டார் அதிரையை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர்.

எதிர்வரும் 2026 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படும் நிலையில், இந்தத் திரைப்பட சர்ச்சை அதிரை போன்ற பகுதிகளில் விஜய்க்கு எதிராக ஒரு வலுவான அரசியல் அலையை உருவாக்கியுள்ளது. திரைப்படத்தின் வாயிலாக ஏற்பட்டுள்ள இந்தச் சறுக்கல், கள அரசியலில் அவரது செல்வாக்கைக் கணிசமாகப் பாதித்துள்ளது.

திரைப்படக் குழுவோ அல்லது நடிகர் விஜய்யோ இந்தக் காட்சிகள் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காதது, மக்கள் மத்தியிலான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. 2026 தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், இந்த எதிர்ப்புகளை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...