தேர்தல் பரப்புரை நிறைவடைந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதிரையில் ஜனநாயகத்தை விலைக்கு வாங்கும் முயற்சிகள் அரங்கேறி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று சில அரசியல் கட்சிகள் வெளிப்படையாகப் பண விநியோகம் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
மிரட்டப்படும் சாமானியர்கள்
வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைப் புகைப்படம் எடுத்து, சம்பந்தப்பட்ட கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு வாட்ஸ்ஆப் (WhatsApp) தளத்தில் விமர்சித்த ஒரு நபரை, அக்கட்சிக்காரர்கள் நேரடியாக மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்குப் பயந்து அவர் அந்தப் பதிவை நீக்கியுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தை அக்குறிப்பிட்ட கட்சியின் நகரப் பொறுப்பாளரை டேக் (Tag) செய்து அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓட்டுக் காசா? உங்கள் உரிமைக்கான விலையா?
நமக்கு வந்து சேர வேண்டிய அரசுத் திட்டங்களில் அடிக்கப்படும் கொள்ளையும் ஊழலும்தான், இப்போது உங்கள் வீட்டு வாசலில் ‘ஓட்டுச் சில்லறையாக’ வழங்கப்படுகிறது. உங்கள் வீட்டுக்கு வந்து ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களின் முகங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; அவர்கள்தான் உண்மையான ஊழல் அரசியல்வாதிகள்.
பணம் வாங்கினால் என்ன நடக்கும்?
அவர்கள் தரும் பணத்தை நீங்கள் வாங்கினால், நீங்களும் அந்த ஊழலின் கூட்டாளியாகிவிடுவீர்கள். எதிர்காலத்தில் அரசிடம் உரிமையோடு கேள்வி கேட்கவோ, உங்கள் பகுதிக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைக்கவோ தகுதியற்றவர்களாகி விடுவீர்கள்.
நினைவில் கொள்க:
பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது லஞ்சம். லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஹராமான (தடுக்கப்பட்ட) செயல் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
நேர்மையாக வாக்களிப்போம்! ஜனநாயகத்தைக் காப்போம்!
