அதிரையில் அதிமுக எந்த முகத்துடன் ஓட்டு கேட்கும்? பாஜக கூட்டணியால் கடும் அதிருப்தியில் மக்கள்!

Editorial
0



2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.வி. சேகருக்கு எதிராக அதிரை மற்றும் தொகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

கடந்த காலங்களில் பட்ட பாடங்களை மறந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கொடுத்த வாக்குறுதியை மீறி மீண்டும் பாஜகவுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) நாடாளுமன்றத்தில் அளித்த ஆதரவு மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குத் துணை நின்றது போன்றவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.


சி.வி. சேகர் கடந்த முறை (2016-2021) சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் அதிராம்பட்டினம் பகுதியின் வளர்ச்சிக்கு பணிபுரியவில்லை என மக்கள் ஆக்ரோஷமாக குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, 2018-ல் வீசிய கோரத்தாண்டவமான கஜா புயலின் போது அதிராம்பட்டினம் மிகக் கடுமையான பேரழிவைச் சந்தித்தது. வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் பல தலைமுறைகளாக வளர்த்த தென்னை மரங்களை இழந்து, மின்சாரம்கூட இன்றி மக்கள் நடுத்தெருவில் நின்ற அந்த இருண்ட காலக்கட்டத்தில், அப்போதைய எம்.எல்.ஏ-வான சி.வி. சேகர் முறையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவோ, மக்களின் கண்ணீரைத் துடைக்கவோ முன்வரவில்லை என்ற வேதனை அதிரை மக்கள், விவசாயிகள் மத்தியில் இன்றும் ஆறாத வடுவாகவே உள்ளது.


இதற்கு மேலாக, சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற உள்ளூர் விவகாரங்களிலும் அவர் காட்டிய மவுனம் பொதுமக்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. புகழ் பெற்ற 'இமாம் ஷாஃபி பள்ளி' மற்றும் 'ஆர்டா' (ARDA) ஆகிய விவகாரங்களில் அதிராம்பட்டினம் திமுக நகராட்சி நிர்வாகம் எடுத்த சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கண்டித்து அவர் ஒரு முறையான நடவடிக்கை கூட எழுப்பவில்லை என்பது முக்கியக் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.


இது குறித்து அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "கஜா புயலில் அதிரையே உருக்குலைந்து கிடந்தபோது எங்களை எட்டிப் பார்த்து உரிய நிவாரணம் வழங்காதவர், இப்போது வாக்குக் கேட்டு மட்டும் எந்த முகத்துடன் வருகிறார்? எங்கள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, இமாம் ஷாஃபி பள்ளி மற்றும் ஆர்டா விவகாரத்தில் நகராட்சி எங்களுக்கு எதிராகச் செயல்பட்டபோதும் சி.வி. சேகர் வாய் திறக்கவே இல்லை. கோவிட் பெருந்தொற்று காலத்தில் சிறுபான்மையினரைக் குற்றவாளிகளாகச் சித்தரித்தபோதும் அவர்கள் பாஜகவோடு கைகோர்த்து வேடிக்கைதான் பார்த்தார்கள். எந்த ஒரு நெருக்கடியான சூழலிலும் எங்களுக்காகக் குரல் கொடுக்காதவர்களை இந்தத் தேர்தலில் நாங்கள் நம்பத் தயாராக இல்லை," எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.


சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், கஜா புயல் பேரிடர் காலம் மற்றும் உள்ளூர் சார்ந்த அடிப்படை விவகாரங்களில் அக்கறை காட்டத் தவறியதன் ஒட்டுமொத்த விளைவாக, பட்டுக்கோட்டை தேர்தல் களத்தில் அதிமுகவும் அதன் வேட்பாளர் சி.வி. சேகரும் மக்களிடம் இருந்து மிகக் கடுமையான சவாலையும் தொடர்ச்சியான எதிர்ப்பையும் சந்தித்து வருகின்றனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...