அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்களிடம், சில தனியார் நிறுவனங்களின் பொருட்களை வாங்குமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்துவதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்துள்ளன.
இது முற்றிலும் சட்டவிரோதம்
அரசு வழங்கும் மானிய விலை பொருட்களைப் பெறச் செல்லும் மக்களிடம் சோப்பு, தேயிலைத் தூள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனத் தயாரிப்புகளை வாங்கியே ஆக வேண்டும் என வற்புறுத்துவது பொது விநியோகத் திட்ட விதிகளுக்கு முரணான, சட்டவிரோதச் செயலாகும். நியாய விலைக் கடைகளில் அரசு வழங்கும் பொருட்களை மட்டுமே பெற பொதுமக்களுக்கு முழு உரிமை உள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு:
ரேஷன் கடைகளில் விற்கப்படும் எந்தவொரு தனியார் பொருட்களையும் பொதுமக்கள் வாங்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் அரசு தரப்பில் கிடையாது.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான அரசுப் பொருட்களை மட்டுமே கேட்டுப் பெறலாம். தேவையில்லாத பொருட்களை வாங்க மறுக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.
இது போன்று ரேஷன் கடைகளில் யாரேனும் தனியார் பொருட்களை வாங்க வற்புறுத்தினால், உடனடியாக சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அதிகாரி (Tahsildar - Civil Supplies), குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் அல்லது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
பொதுமக்கள் எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், கட்டாய விற்பனையில் ஈடுபடும் நியாய விலைக் கடைகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிகை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
