அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத் தலைவர் குணசேகரனிடம், அதிராம்பட்டினம் வார்டு எண் : 2-இல் உள்ள இஜாபா பள்ளியை ஒட்டியுள்ள சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்துத் தரக் கோரி, C.M.P லேன் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
அதில், “வார்டு எண் 2-இல் உள்ள C.M.P லேன், இஜாபா பள்ளியை ஒட்டி அமைந்துள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையை பள்ளி மாணவர்கள், மக்தப் மற்றும் மதரஸா மாணவர்கள், பள்ளிவாசலுக்கு வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சாலை மிகுந்த சேதமடைந்து மேடு பள்ளமாக இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் பல நாட்கள் நீர் தேங்கி, சாலையை பயன்படுத்துவதில் மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.
இந்த வார்டில் இச்சாலையைச் சுற்றியுள்ள பிற அனைத்து சாலைகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சாலை மட்டும் புதிதாக அமைக்கப்படாமல் உள்ளது. பலமுறை இப்பகுதி மக்கள் முயன்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது சற்றே வருத்தமளிக்கிறது.
இருப்பினும், நம்பிக்கை விடாமல் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த வார்டு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக இம்மனுவை சமர்ப்பிக்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட நகர்மன்ற துணைத் தலைவர் அவர்கள், இரண்டு மாத காலத்திற்குள் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


