அதிராம்பட்டினம்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் வியாழன் அன்று நடைபெற உள்ளது. இதற்கான சூறாவளிப் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விவாதம் பொதுமக்களிடையே நடைபெற்று வருவதைக் காண முடிகிறது.
இது தொடர்பாக பல தரப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிய அவர்களிடம் பேசினோம்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் காரணமாக அதிமுகவுக்கு வாக்களிப்பதை அதிரை மக்கள் விரும்பவில்லை. மதவாத சக்திகளுக்கு அதிராம்பட்டினம் மட்டுமின்றி தஞ்சை டெல்டாவிலேயே இடமில்லை என்ற உணர்வை இது பிரதிபலிக்கிறது. நாம் தமிழர், தவேக ஆகிய கட்சிகளுக்கும் குறிப்பிடும்படியான ஆதரவை பார்க்கமுடியவில்லை. இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் விஜய் ஆதரவு இருந்தாலும் ஜனநாயகன் படத்திலிருந்து கசிந்த காட்சிகள் விஜய்க்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக திமுகவுக்கு வருவோம். பொதுமக்கள் மாநில அளவில் திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பயன்படுத்தி இருந்தாலும், தொகுதி அளவில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரையின் பணிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தெரிவிக்கின்றனர். பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் திமுக தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எதிராக இருந்ததாக ஆதங்கப்படுகிறார்கள்.
பாஜக வந்துவிடக்கூடாது என்ற காரணத்தாலேயே திமுகவுக்கு வேறு வழியின்றி மக்கள் ஆதரவளிப்பதைப் பார்க்க முடிகிறதே தவிர திமுக எம்.எல்.ஏ வின் திட்டங்களுக்காக அல்ல என்பதை உணர முடிகிறது.
இதில் சிலரது கருத்துகள் நுட்பமானதாகவும், ஏற்கும் வகையிலும் இருந்தது. “அதிரை மக்கள் எப்படியும் நமக்குதான் வாக்களிப்பார்கள் என்ற மமதையில்தான் திமுக அரசு நமது கோரிக்கைகளைப் புறந்தள்ளி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கிறது. இந்த தேர்தலில் எப்படியும் பாஜக வரப்போவது இல்லை. எனவே இந்த முறை திமுகவுக்கு வாக்களிக்காமல் அதன் வாக்கு வங்கியை குறைத்து காட்ட போகிறோம்.
இது தொடர்பாக நண்பர்கள் உறவினர்களுடன் உரையாடி வருகிறோம் என்றனர். இவர்கள் அதிமுக, நாம் தமிழர், தவெக, அதிரையிலிருந்து போட்டியிடும் 2 சுயேட்சைகளுக்கும் ஆதரவளிக்க விரும்பவில்லை. வேறு நல்ல வேட்பாளரை அவர்களின் வெட்புமனுவைப் படித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாக்களிக்கப்போகிறோம். எங்கள் நோக்கம் திமுக தோற்க வேண்டும் என்பதல்ல. அதன் வாக்கு வங்கியைக் குறைப்பதாகும்.” என்றனர்.
ஏற்கனவே பட்டுக்கோட்டை தேர்தல் களத்தில் திமுக- அதிமுக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், 5 ஆண்டுகளில் மக்களை உதாசீனப்படுத்தியதன் விளைவால் நம்பிக்கையான வாக்குகளை இழக்கும் நிலைக்கு திமுக சென்றுள்ளது. இது தொகுதியில் திமுகவின் வெற்றிக்கே குந்தகமாகலாம்.
