அதிரை பிறை முதல் நீயா நானா வரை - என் அதிரை மக்களுக்கு நன்றி

Editorial
0
17 வயதில் ‘அதிரை பிறை’ இணையதளத்தை தொடங்கியபோது, ஊடக உலகம் இவ்வளவு தூரம் என்னை அழைத்து வரும் என்று நினைத்துப் பார்த்ததில்லை.

கையில் ஒரு கனவோடும், சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற துடிப்போடும் ‘அதிரை பிறை’ இணையதளத்தைத் தொடங்கிய அந்தப் பள்ளிப்பருவச் சிறுவனை இப்போதும் என் நினைவுகளில் பார்க்க முடிகிறது. இன்று திரும்பிப் பார்க்கையில், அந்தச் சிறிய தொடக்கம்தான் என்னை மாலை முரசு, சன் நியூஸ், காவேரி தொலைக்காட்சி, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம், நியூஸ் தமிழ் எனத் தமிழ்நாட்டின் முன்னணி ஊடகங்களின் வழியாகப் பயணிக்க வைத்திருக்கிறது. தற்போது Behindwoods-ல் முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகிறேன்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் இயங்கினாலும், கேமராக்களுக்குப் பின்னால் நின்று உண்மையைச் சரிபார்ப்பதும், பொய் செய்திகளை முறியடித்து Fact Check வீடியோக்கள் உருவாக்குவதுமே என் தினசரி அடையாளமாக இருந்தது. எப்போதும் திரைக்குப் பின்னால் உழைத்துக் கொண்டிருந்த என்னை, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் முதன்மை விவாதக் களமாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ மேடை தேடி வந்தது.

"இன்ஸ்டாகிராமில் உங்கள் வீடியோக்களைத் தொடர்ந்து பார்க்கிறோம், நீயா நானாவில் பேச முடியுமா?" என்று வந்த அந்த ஒரு தொலைபேசி அழைப்பு, உள்ளுக்குள் மிகப்பெரிய நடுக்கத்தையும் தயக்கத்தையும் விதைத்தது.

தலைப்பு சாதாரணமானதல்ல: “அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சொல்லும் அரசு VS மறுக்கும் தம்பதிகள்.”

குழந்தைப்பேறு குறைவதால் எதிர்காலத்தில் ஏற்படும் சமூகப் பொருளாதார பாதிப்புகளைப் பல தரவுகளுடன் முன்வைக்க நினைத்தாலும், என் பேச்சில் ஒரு வரி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் கூட 'பிற்போக்குவாதி', 'ஆணாதிக்கவாதி' என்ற வசைகள் விழுந்துவிடுமோ என்ற அச்சம் கடைசி நொடி வரை நெஞ்சில் ஓடிக்கொண்டே இருந்தது.

மருத்துவர்கள், பேராசிரியர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் அமர்ந்திருக்கும் அந்தப் பெரும் அரங்கில் எனக்கு மைக் கிடைக்குமா? கிடைத்தாலும் சுருக்கமாகவும் ஆழமாகவும் பேசிவிட முடியுமா? பல கேள்விகள். ஆனால், தயக்கங்களை உடைத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரங்கிற்குள் நுழைந்தேன்.

காரணம், ஊரிலிருந்து தன் மகனின் பேச்சைக் கேட்க நேரில் வந்திருந்த என் வாப்பாவின் முகம்.

அரங்கில் மைக் என் கைக்கு வந்ததும், நான் சேகரித்த தரவுகளையும் உண்மைகளையும் முழு நம்பிக்கையோடு முன்வைத்தேன். நான் பேசி முடித்ததும் நெறியாளர் அண்ணன் கோபிநாத் அவர்கள் என் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி விவாதத்தை முன்னெடுத்த அந்தத் தருணமும், நிகழ்ச்சி முடிந்ததும் எதிர் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் நேரில் வந்து வாழ்த்தியதும் என் பயங்களை முற்றிலுமாகத் துடைத்தெறிந்தன.

ஆனால், எல்லாவற்றையும் விட என் வாழ்நாளில் நான் மறக்கவே முடியாத தருணம் அதுதான்—சிறப்பாகப் பேசியதற்காக அண்ணன் கோபிநாத் அவர்கள் எனக்கு ஸ்மார்ட் போன் பரிசளித்த விநாடி!

முதல் நபராக எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்குத் துளியும் இருந்ததில்லை. இதுவரை என் பெற்றோர் மனம் திருப்தியடையும்படி, பெருமைப்படும்படி நான் என்ன செய்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அந்த அரங்கில் தன் கண்முன்னே தன் மகனுக்குக் கிடைத்த அந்த அங்கீகாரத்தைப் பார்த்து என் வாப்பாவின் கண்களில் தெரிந்த பெருமிதமும்... என் அம்மா அந்த வீடியோக்களைத் தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து ஊரெங்கும் பகிர்ந்து மகிழ்ந்த அந்த நெகிழ்ச்சியும்... ஒரு மகனாக என் வாழ்நாள் முழுமைக்குமான மிகப்பெரிய சொத்து!

10 ஆண்டுகள் ஊடகத்தில் உழைத்தாலும் முதன்முறையாகத் திரையில் முகம் காட்டிய எனக்கு, நண்பர்கள், உறவினர்கள் தாண்டி முகம் தெரியாத எண்ணற்ற மனிதர்கள் அனுப்பி வரும் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்திகள் இன்னும் கனவு போலவே இருக்கின்றன.

17 வயதில் அதிரையில் விதைக்கப்பட்ட ஒரு சாதாரண கனவு, உண்மைக்காகவும் உழைப்பிற்காகவும் நேர்மையாக நின்றால் ஒருநாள் மிகப்பெரிய மேடைகளில் அங்கீகரிக்கப்படும் என்பதற்கு என் பயணமே சாட்சி.

வாய்ப்பளித்த விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், ஊக்கமளித்த அண்ணன் கோபிநாத் அவர்களுக்கும், என் பயணத்தில் துணை நிற்கும் உங்கள்  அனைவருக்கும், குறிப்பாக சிறுவயதிலிருந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் அதிரை மக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். தொடர்ந்து உண்மைக்காகவும் மக்களுக்காகவும் இயங்குவோம்!


- நூருல் இப்னு ஜஹபர் அலி 


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...